ஜெயலலிதா இருக்கும்போது ஏன் அரசியலுக்கு வரவில்லை, பயமா என்று கேட்கிறார்கள். ஜெயலலிதா இருக்கும்போதே 1996-ல் வாய்ஸ் கொடுத்தவன் நான் என்று ரஜினி பேசினார்.
சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் எம்ஜிஆர் சிலையை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். விழாவில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகர்கள் நாசர், பிரபு, விஜயகுமார், நடிகைகள் சரோஜா தேவி, சச்சு, லதா, அம்பிகா, இயக்குனர் பி.வாசு, தயாரிப்பாளர் தாணு, வி.ஜி.சந்தோசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் ரஜினி பேசுகையில், ''ஜெயலலிதா இருக்கும்போது ஏன் நீங்கள் அரசியலுக்கு வரவில்லை? பயமா என்று கேட்கிறார்கள். எனக்கு எதற்கு பயம்? ஜெயலலிதா இருக்கும்போதே 1996-ல் வாய்ஸ் கொடுத்தவன் நான்.
தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது என்று நினைத்து வருகிறீர்களா என்று கேட்கிறார்கள். தமிழகத்தில் நல்ல தலைவனுக்கு வெற்றிடம் உள்ளது என்பது உண்மை. நல்ல திறமையான, சக்திவாய்ந்த இரு தலைவர்கள் இருந்தார்கள். ஜெயலலிதாவின் ஆளுமை குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. ஜெயலலிதா போல கட்சியை இந்தியாவில் யாரும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கவில்லை.
எனது நண்பர் கருணாநிதி 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாதபோதும் கட்சியை கட்டிக்காத்தவர். பல தலைவர்களை உருவாக்கியவர். அவர் தற்போது உடல் நலமில்லாமல் இருக்கிறார். இந்த சூழலில் தமிழகத்துக்கு ஒரு தலைவன் தேவை. அந்த இருவரின் இடத்தை நிரப்புவதற்கு நான் வருகிறேன். நம் பக்கம் ஆண்டவனே இருக்கிறார்'' என்று ரஜினிகாந்த் பேசினார்.